உரையாடலின் ஒரு பகுதி 60
உறவுகளில் ஆகட்டும், நட்பில் ஆகட்டும் நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்து சில நாட்கள் ஒன்றாய் கழித்து விடைபெறும் போது என்ன சாப்பிட்டோம் எங்கு சுற்றினோம் என்பது அல்ல முக்கியம். மனம் விட்டு எத்தனை பேசினோம் என்பது தான் முக்கியம்

உறவுகளில் ஆகட்டும், நட்பில் ஆகட்டும் நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்து சில நாட்கள் ஒன்றாய் கழித்து விடைபெறும் போது என்ன சாப்பிட்டோம் எங்கு சுற்றினோம் என்பது அல்ல முக்கியம். மனம் விட்டு எத்தனை பேசினோம் என்பது தான் முக்கியம்
உதட்டில் புன் சிரிப்பை தவழவிட்டு கொண்டுள்ளோரது துவேஷத்தில் வெந்து விகாரத்தோடு நசிந்து வரும் பந்தங்கள் இந்த உலகில் எத்தனை யாருக்கு தெரியும்? தெரியாவிட்டாலும் இருப்பது என்னவோ நிஜம் தான்.
ஒரு மனிதனின் வாழ்க்கை அவனுக்கு மட்டுமே சொந்தமானது அதை யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற சுதந்திரம் வேண்டும். சில உண்மைகளை எத்தனை தாமதமாக அறிந்து கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை நல்லது, அதுவும் மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதை விட சம்மந்தபட்டவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது ரொம்பவும் நல்லது.
உடலில் ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை விரல் தான் உடலின் கண்களை திறக்க வல்லது. பாலாடையின் மீது ஊர்ந்து போகும் சிற்றெறும்பின் கால் தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும், வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியே தான் நினைவின் ஊற்று கசிந்து கொண்டே இருக்கும் கண்ணுக்கு தெரியாமல் நினைவில் படறும் அந்த நறுமணத்திற்க்கு ஈடு சொல்ல உலகில் எந்த நறுமண பொருளையும் மனிதன் கண்டறியவில்லை.
இயற்கையின் வெவ்வேறு ஆற்றலை உணவாக சமைக்க தெரிந்தது தான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. மண்ணும், மண்ணில் இருக்கும் தாதுக்களும் உடலினை என்னென்ன செய்யும் என்பதை அறிந்தாலே உணவு பழக்க வழக்கம் சரியாகிவிடும்.
அறிவாலும், குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை விதிகளாலும், கட்டளைகளாலும் எடுக்க முடியாது மனிதன் எடுக்க வேண்டிய முடிவை சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம். கட்டளைகளால் கட்டியெழுப்பபடுவது தான் அரசாட்சி அதன் உறுப்புகள் அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதினாலேயே, எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது .எல்லோர் கையிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.
மனித அனுமானங்களுக்கு அப்பால் காலம் இயங்கி கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறி கலங்கி போய்விடுகிறான். வேறு வழி, கதை சொல்லும் போது பெருகக் கூடியது, நினைக்கும் போது திரளக்கூடியது, மறக்க எண்ணும் போது நம்மை கண்டு சிரிக்கக்கூடியது வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலை கதைகளிடம் தான் மனிதன் உணர்கிறான்.
பேசாமல் இருந்து விட்டால் மறந்து அழிந்து போவது மொழி மட்டுமல்ல உறவுகளும் தான். உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் தளர்ந்து இல்லாது போய்விடும் இயற்கையின் நியதி அப்படி தான் இருக்கிறது அதனால் எல்லாவற்றையும் சரியான அளவில் உபயோகிப்போம்.
பல நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ அதையே அதிகம் நினைக்க வைக்கிறது. இதில் அன்பு கொண்டதோ அல்லது கோபம் கொண்டதோ, ஏமாற்றியதோ அல்லது ஏமாந்ததோ, இரக்கம் கொண்டதோ அல்லது கடுமையாய் இருந்ததோ, இணைந்து இருந்ததோ அல்லது விலகிப் போனதோ, நம்பி இருந்ததோ அல்லது நம்பாமல் கெட்டதோ இப்படி பலதையும் மனம் மறக்க நினைக்கிறது. ஆனால் பல சூழ்நிலைகளில் விதி அதிகம் நினைக்க வைக்கிறது. என்ன கொடுமையடா சாமி.
ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய முடியாது. அப்படியே மதிப்பீடு செய்ய முனைந்தாலும் அந்த மனிதனின் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.