அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை.
அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.
ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ-மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.
அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேநீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.
உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள்.
ஆசிரியர் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேநீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.
மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.
