பவளக் கொடியில் பழுத்தசெவ் வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
நல்ல இன்பப் பதவி வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களே,
இந்திரப் பதவியைப் பெற்றுத் தேவலோகராசதானியாகிய அமராவதியை ஆள வேண்டுமெனெனின்
அதன்பொருட்டு, பவளக் கொடிபோலக் கனிந்த செவ்வாயும்
குளிர்ந்த புன்னகையோடு கூடிய வெள்ளிய அழகிய பல் வரிசையும்
தமக்குத் துணையாக நிற்க,
எங்கள் கடவுளாகிய சிவபெருமானைக் குழையும்படியாக
எதிர்ப்பட்டுத் துடிபோன்ற இடையைக் கனத்தால்
மறையச் செய்யும் இரண்டு தனங்களை உடையவளாகிய
அபிராமியை வழிபடுவீர்களாக.
