மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம்.
பொதுவாக முருங்கையின் பூ மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும். விந்தணு பெருகும். விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும். நாய்க் கடி விஷத்தைப் போக்கவும் முருங்கை பயன்படும். கிட்னி தொடர்பான பிரச்சனைகளுக்கும் முருங்கை இலை முக்கியத்துவம் வாய்ந்தது. இரத்தக்கட்டு வீக்கத்திற்கு முருங்கை இலையை அரைத்துப் பூசினால் நீங்கும்.
முருங்கைப் பூ உடல் சூட்டைக் குறைக்கும், தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும். சளி தொந்தரவையெல்லாம் முருங்கைப் பூ நீக்கும். கண் பார்வைக்கு நல்லது. முருங்கை மரத்தில் இருக்கும் பிசினைபதப்படுத்தி சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சிகளெல்லாம் வெளியேறிவிடும். அதனால் வீட்டில் முருங்கையை வளர்த்தால் எல்லா விதத்திலும் நல்லது. வாஸ்துப்படி முருங்கையை வீட்டின் முன்புறத்தில் வைக்கக்கூடாது. வீட்டின் பின்புறத்தில் வைத்தால் எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.
முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.