ஒரு கிராமம்.சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.
அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல்.
ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று
சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.
’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய்.
காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.
ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன்.
என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.
அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .
”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,
“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம்.
இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.
சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு
மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை
அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள்,
”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம்.
ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால்,
இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.
அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான்.
”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து,
அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன்,
தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.
ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே,
எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன