எக்கருவி எப்பாகம், உடலின் எத்தொழில் கெட்டிருக்கிறதென்று ஆராய்ச்சியாலறிவதே,
வைத்தியத்தின் முதல் முக்கிய தொழில், இதை அறிந்து பிற்பாடு சிகிச்சை
ஆரம்பிக்கப்படுகிறது. வைத்தியம் மேல் நாட்டு முறையிலும் எவ்வளவோ வளர்ச்சி
பெற்றிருந்தும், எவ்வளவோ ஆராய்ச்சி முறைகள், ஆராய்ச்சிக் கருவிகள் ஏற்பட்டும்,
நோயின் காரணத்தை கண்டுபிடித்தல், இன்னும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
நோய்களின் உற்பத்தி ஆராய்ச்சி வலுக்க, வலுக்க சீர் கெட்ட இயற்கை விரோத நாகரிக
வாழ்க்கையால், காரணம் கண்டுபிடிக்க முடியாத நூதன பிணிகள், ராக்ஷசத் தன்மையுடன்
வளர்ந்து கொண்டே போகின்றன. உடலின் கோளாறுகளால் ” இது கெட்டது, அது கெட்டது
என்று தீர்மானிக்கிறார்கள். அந்த வெளிச்சின்னங்களைப் போக்க சிகிச்சை
அளிக்கிறார்கள். நோய் அகலுவதில்லை மறுபடியும் வந்துவிடுகிறது. மூலகாரணத்தை
அறிய வேண்டும். இதை ஆராய்ச்சி செய்ய பெரும்பாலான வைத்தியர்களுக்குச்
சாவகாசமிருப்பதில்லை. மனப்போக்கு தீவிரம் இருப்பதில்லை. அதிக வருமானம் சீக்கிரம்
தேடிக்கொள்ளுவதில், பலருக்கு மனம் சென்று விடுகிறது. ஆராய்ச்சி செய்யத்
திறமையற்ற வைத்தியர்களும் உள்ளார்கள், உடல் நோய், விஞ்ஞானம் நன்றாகத்
தெரிந்தவனாக வைத்தியன் இருப்பதோடும் கூட தன் உள்ளறிவு வளர்ச்சி
பெற்றவனாகவும் இருந்தால், நோய்க்கு பல காரணங்கள் விளங்கும் பொழுது இக்காரணம்
தான் இந்த நோயளிக்குச் சரி என்பதை தவறின்றித் தீர்மானித்துவிடலாம். மேலும்
நோயாளியின் சரித்திரம் வாழ்க்கை, மனப் போக்கு, ஒழுக்கம், நடத்தை எல்லாவற்றையும்
தெரிந்து கொள்ளுதல் மிக்க அவசியமாகும்.