ஒரு நாள், ஒரு தாய் துறவிக்கோலம் பூண்ட தன் மகனை மீண்டும் உலக வாழ்விற் புகச்சொல்லுமாறு
அன்னையை வேண்ட, அவர் கூறியதாவது, ”
ஒரு துறவிக்குத் தாயாக இருக்கும் பேறு கிடைப்பது எளிதல்ல.
ஒரு பித்தளைப் பாத்திரத்தின் மீதுள்ள பற்றைத் துறப்பதே மக்களுக்கு முடியாது போகிறது.
இவ்வுலகத்தையே துறப்பது எளிதானதா? உனக்கேன் இந்தக் கவலை?”.
புதிதாக உபதேசம் செய்யப்பட்ட ஒரு சீடப்பெண்ணை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது,
”அப்பொழுது தான் விதவையான எந்தப் பெண்ணுக்கும் நான் உபதேசம் செய்வதில்லை.
ஆயினும் உன்னிடம் ஞான சுபாவம் இருப்பதால் தான் உனக்காக அவ்விதியை விட்டு விலகினேன்.
நான் செய்த இக்காரியத்திற்காகப் பின்னால் நான் வருந்தாதபடி நீ நடந்து கொள்ளவேண்டும்.
சீடன் செய்யும் பாவத்தினால் குருதான் துன்பமடைகிறார்.
எப்போதும் கால முறை தவறாமல், புனித மந்திரத்திரத்தை ஜபிப்பாயாக.