Skip to content
குருவருளும் திருவருளும் துணை நிற்க
இந்த இணைய தளத்தில் சஞ்சரிக்கும் அன்பு வாசகர்களுக்கு
என்றென்றும்என் மனமார்ந்த வணக்கங்கள்.
எத்தனையோ பிறவிகளின் தொடர்ச்சியால் ஏற்படும் பந்தம்
தாய், தந்தை, மனைவி, மக்கள் மட்டுமல்ல, குருவும் கூட;
யார் அந்த குரு? யாருக்கு வேண்டும் குரு? எதற்கு அந்த குரு?
இப்படிப்பட்ட சிந்தனைகள் உடையவர்களுக்கும்,
தன்னந்தனியே முழு வாழ்க்கையைப் பார்க்க தைரியம் இருப்போருக்கும்,
வேண்டிய விஷயங்களைத் தாங்கி உலா வரும் இந்த இணைய தளத்தில்
நான் மகரிஷியுடன் இப்புவிகால கணக்கின் படி ஒரு பதினைந்து வருட
தொடர்பு கொண்டவன், ஜென்மங்கள் எத்தனை என்று அவருக்கு மட்டுமே தெரியும்.
ஏனோ அதை அவர் எனக்கு தெரிவிக்கவில்லை, தெரிந்து கொள்ளும் ஆவலும்
எனக்கு இல்லை, அவசியமும் எனக்கு ஏற்படவில்லை.
அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் ஜோதிடத்திலும் சரி, மனதளவிலும் சரி,
வாழ்க்கையிலும் சரி எத்தனை எத்தனையோ.
வாழ்கையின் பொருள் என்றுமே புதிர்தான்.
ஆனால் சுகமே விடை தேடிக் கண்டுபிடிப்பதில் தான்.
அதில் தேறியவர்கள் சில பேர், தோற்றவர்கள் பல பேர்,
தோற்றவர்களின் அணியில் நான் இருந்தாலும் ஜெயித்தவர்களின்
செல்லப் பிள்ளையாய் இருந்ததது என் பாக்கியமே.
அவர் முன்னால் நான் செய்த தவறுகள் அனைத்தும் சரியாகவே இருந்தது
என்றும் சொல்லலாம், அவரால் சரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது
அல்லது அவரால் சரியாக்கப்பட்டது.
என்னில் தோன்றிய எத்தனையோ வினாக்களுக்கு
வார்த்தைகளின் மூலம் பதிலளிக்காமல் தன் இருப்பின் மூலமே
என் வினாக்களை என்னை விட்டு அகற்றிய பெருமையை நான் அறியவே
ஆண்டுகள் பல கடந்தன.
என் பயணத்தின் போது நான் அவர் அருகில் இருந்தவண்ணம் பேசிய காலங்களில்
எனக்குள் அவர் என்னை அறியாமல் விதைத்த விதைகள் அப்போது புரியவில்லை,
உண்மையைச் சொன்னால் புரிவதற்கு பல காலங்கள் ஆயின.
அவர் அருகில் இருந்த போது அவர் அருமை பல பேருக்கு தெரியவில்லை.
அதைப் பற்றி அவர் பெரிதாய் நினைக்கவும் இல்லை.
அவர் எதை நினைத்தாரோ அதைச் செய்தார், இன்னும் சரியாய் சொல்லப் போனால்
எது அவரை நினைக்க வைத்ததோ அதன்படி அவர் நடந்தார், இருந்தார்.
ஒவ்வொரு வினாடியும் குருவுக்குள் சிஷ்யனாகவும், சிஷ்யனுக்குள் குருவாகவும்
பந்தமில்லாமல் பந்தப்பட்ட நிலையில் காலங்கள் உருண்டோடியது.
காலத்தின் சூட்சமத்தை உணர்ந்தவர். கருவியாக எனைக் கொண்டு சாதித்த காரியங்கள்
ஏராளம். அதில் கருவியாய் இருந்த பெருமை அவர் மனதில் எனக்கு எப்போதும் உண்டு.
அந்த தைரியத்தில் உருவாகி இந்த இணைய தளத்தின் மூலம்
உங்கள் முன் உலா வந்து கொண்டிருக்கிறேன்.
Go to Top
இந்த உலகில் உள்ள
எல்லா மனிதர்களுக்கும்
குரு என்னும் இறைவனின்
அருட்கடாட்சம் கிடைக்கிறதா.
நமஸ்காரங்க அய்யா.
முதல் முறை படித்தப்போது
எனக்குள் எந்த மாற்றமும் நிகழ்ந்ததா என்று தெரியலிங்க அய்யா.
ஆனால் ஏதா ஒரு மகிழ்ச்சி
தெரிகிறதுங்க அய்யா
குரு என்பவர் எப்போதுமே அன்பின் வடிவமாக தான்
இருப்பார்களா அய்யா.