பவனமுக்தாசனங்கள் ஆண், பெண், வயதானவர்,
சிறுவர் யாவரும் செய்யக்கூடிய மிக இலகுவான ஆசனமாகும்.
உடல் முதுமை அடைந்து இறுகுவதைத் தடை செய்யும்.
பலவீனமானவர்கள், நோயாளிகள் உடல் கனமானவர்கள் யாவரும்
செய்யக்கூடிய மிக எளிமையான யோகாசனம், இரத்த அழுத்த
நோய்க்கு மிகச் சிறந்த பயிற்சி. பவன முக்தாசனம் மனிதனை
அமைதிப்படுத்தி, ஒரு சிறந்த நல்ல ஆரோக்கியப் பாதைக்கு
அழைத்துச் செல்லும், யோகாசனத்தைப் பற்றியோ பிற விரைவுப்
பயிற்சியைப் பற்றியோ ஒன்றும் தெரியாதவர்கள் கூட
இப்பயிற்சியை வெகு எளிதாகப் பயிலலாம். பிற கடினமான
யோகாசனங்களைப் பழகும் முன்பாக இவ்வாசனத்தைப்
பழகுவது மிகவும் நல்லது. பெருவாரியான நோய்களைக்
குணப்படுத்தும் சக்தி இவ்வாசனத்துக்கு உண்டு. உடல்
முதுமையடைவதைத் தடுக்கும். ஒவ்வோர் ஆசனத்தையும் 2 முதல் 3 முறை
செய்தால் போதுமானது. இவ்வாசனத்தைப் பழகுகிறவர்கள்
ஆரோக்கியமாகவும் தெளிந்த அமைதியான சிந்தனையுடனும்
முகப் பொலிவுடனும் எப்போதும் சந்தோஷமாகவும் இருப்பார்
என யோக நூல்கள் கூறுகின்றன. நீரிழிவு, இருதய நோய், ஆஸ்துமா போன்ற
நோயுள்ளவர்களும் இவ்வாசனத்தினால் அதிகம் பயன் அடையலாம்.
வயோதிகர்களுக்கு ஏற்ற ஆசனம். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும்
தூண்டப்பட்டு இரத்த ஒட்டம் சீரான நிலையில் இருக்கும் வகையில்
இவ்வாசனங்கள் அமையப் பெற்றிருக்கின்றன. இவ்வாசனம்
செய்யும்போது உடலின் எல்லாப் பகுதிகளையும் தளர்ந்த நிலையில்
வைத்துக் கொள்ளவேண்டும். எப்பகுதியையும் இறுக்கமாக வைக்கக்கூடாது.