இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது.
திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.
காலையில் எல்லாம் மாறிவிட்டன.
பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை.
இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால்
எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது?
மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட்,
மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க…
‘எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா,
எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்’
என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள்
வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம்
கொஞ்ச நாளில் காலியாக விட,
நாடு முழுவதும் உணவுப்பொருட்களைத் தேடி ஓட ஆரம்பித்தார்கள்.
ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள்,
போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.
கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன.
அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும்,
10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப் பட்டது.
பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்துக்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது.
எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும்,
மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும்
மாதக் கட்டணமாகத் தங்கம் பெறப்பட்டது.
நாடே போர்க்களம் போல் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்க…
விவசாயிகள் மட்டும் எந்தவித பதற்றமோ சலனமோ இன்றி
எப்போதும்போல் கோழி கூவியதும் கலப்பையுடன்
உழவுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
வாரச் சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி, பருப்பு வாங்க,
நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும்
அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்.
உணவுப் பொருட்களுக்காக
பங்களா, கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது.
வேலை தேடி எல்லோரும் கிராமங்களுக்குச் செல்ல…
மூன்று வேளை உணவுடன் மாதந்தோறும்
குடும்பத்துக்குத் தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்த தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு,
அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின.
அரசுக்குத் தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம்
விவசாயிகளிடம் கடனாகப் பெற்றார்கள்.
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே
வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது.
விவசாயத்தின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்ததால்,
நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டது.
வறண்ட பூமியெல்லாம் தவறாது மழை பெய்ததால்
விவசாய நிலங்களாக மாறின.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவுப்பொருட்கள்
போதுமான அளவு கிடைத்ததால்,
மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு,
போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!
பணம் எனும் மாய வலையில் சிக்கியிருந்த நாமெல்லாம்
இயந்திரங்கள் இல்லை,
மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப் பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது.
தயவுசெய்து குறட்டையை நிறுத்திவிட்டு
கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள்…
இது கனவுதான்.
ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை.
சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை
இந்தக் கனவும் அப்படித்தான்…
உயிரற்ற காகிதத்தால் ஆன காசிற்காக,
உயிருள்ள மனித இனமே,
மனித இனத்தை அழித்துகொண்டிருக்கிறது.
எங்கும் கலப்படம்,
எதிலும் கலப்படம்.
பணம் என்பது எந்த மனதையும் மயக்கும் மாயப் பேய்.
கனவு கொஞ்சம் மிகையாக தோன்றினாலும்
நடந்தால் எத்தனை நன்றாக இருக்கும்
இப்படியும் நீங்கள் ஒரு கனவு காணுங்கள்
இயற்கையை மதித்து இறைவனையும் மதிப்போம்
நன்றாக வாழுவோம்
எல்லோரையும் வாழ்த்துவோம்
Nice