” ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர்,
நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற
புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம்.
தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற,
சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி,
ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து
நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ,
அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார்.
வந்தவர்களுக்கோ வாழ்த்தி அனுப்புவார் என எண்ணி வந்தோம்,
இவரோ பாகற்காயை தருகிறார்.
ஏதோ காரணம் இருக்கும் என எண்ணி வாங்கிக் கொண்டு சென்றனர்.
புண்ணிய நீராடி சில நாட்கள் கழித்து சாதுவிடம் வந்து
தாங்கள் கொடுத்த பாகற்காயை எல்லா புண்ணிய நதிகளில் நனைத்து எடுத்து வந்துள்ளோம்,
எங்களை போன்றே இந்த பாகற்காயும் மிகவும் புண்ணியம் படைத்தது என கூறினர்
சாதுவோ தனது சீடரை அழைத்து
இந்த காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வா என கூற,
அந்த பாகற்காய் துண்டுகளில் ஒன்றை சாது எடுத்துக் கொள்ள
மீதியை மற்றவர்களிடம் நீட்ட அவர்களும்
எடுத்து வாயில் போட்ட வேகத்தில் ஒரே கசப்பு என தரையில் துப்பினர்.
அப்போது சாது, புண்ணிய நதிகளில் நீராடிய பாகற்காயின் தன்மை எப்படி
மாறவில்லையோ அது போலவே
தன் குணம் மாறாமல் செய்யும் வழிபாடு தீர்த்த யாத்திரை
போன்றவற்றால் பயனில்லைஎன்று சாது சொன்னார்
இதன் மூலம் நாம் கவனிக்க வேண்டியது
வழிபாட்டின் மூலம் நாம் பயன் அடைய வேண்டுமென்றால்
நமது குணம்
நமது செயல்
ஆகியவற்றின் தன்மை மாறவேண்டும் என்பதே