மாதுளம் பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழவகைகளில் ஒன்று. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாகிறது.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளையில் உள்ள சத்துக்கள் என்னென்ன… அதன் பலன்கள் என்னென்ன என்று பார்ப்போம்..
மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகள் :
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் உடலுக்கு ஆரோக்கியமும், சக்தியும் உண்டாகும்.
மாதுளம் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்தசோகையை தடுக்க உதவுகிறது.
மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உணவு செரிமானத்திற்கு நல்லது.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
மாதுளையை தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.
மாதுளை, வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்சனைகளை சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயை குறைப்பதற்கும் துணைபுரியும்.
தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச்சாற்றை அருந்தினால், இரத்த அழுத்தம் குறையும்.
ஒரு டம்ளர் அளவு மாதுளை பழச்சாற்றில், தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலையில் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினமும் இரு வேளை ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தினால் இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தமாகும், இரத்த விருத்தி உண்டாகும்.
திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.