குருவருளும் திருவருளும் துணை நிற்க
பாவ புண்ணியம்
அன்பு சார்ந்த இணைய தள வாசகர்களுக்கு வணக்கம்
மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும், நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை, தீமைகளை உண்டாக்குகிறது. தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது.
அதாவது பசி, தூக்கம் போன்றவை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் ஆசை நுழையும் போது நன்மையோ, தீமையோ உண்டாகிறது
உதாரணமாக பசிக்கு உணவு என்பது தேவை. ஆனால் அந்த உணவை நாம் ஆசையின் காரணமாக தேவைக்கு அதிகமாக உண்ணும் போது நமக்கு நன்மை செய்ய வேண்டிய உணவு தீமையை செய்யத் தொடங்கிவிடுகிறது.
தேவையின் அளவுகளை ஆசையின் காரணமாக நாம் தாண்டும் போது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியது போல் அமிர்தமும் நஞ்சாகிறது. நமக்கு எது தேவையென்று அறிய தொடங்கிவிட்டாலே நமது ஆசையின் அளவு முடிந்த அளவு குறைந்துவிடும்.
தன்னை பற்றிய சிந்தனையை தேவைகளில் செலுத்தும் போது நன்மை நம்மை நாடி வரும். தேவைகளில் ஆசைகளின் அளவுகள் அதிகமாக அதிகமாக தீமைகள் நம்மை நாடி வந்து தொல்லை செய்யும். இதை புண்ணியம், பாபம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
தன்னைப் பற்றி சரியான சுய மதிப்பீடு இல்லாத நிலையில் நம்மை தீமைகள் அணுகுவதும் நாம் பாபத்திற்கு ஆட்படுவதும் தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும். நாம் அறமுடன் வாழ்ந்து பொருளை சேர்த்தால் இன்பமுடன் இருந்து வீடு பேற்றை அடையலாம்.
இது வாழும் வகை, இப்படி எல்லோராலும் வாழ முடிகிறதா என்ற வினா நமக்குள் எழும்போது இல்லையென்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இப்போதைய சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து பொருளை சேர்ப்பது தான் நோக்கமாகிவிட்டது.
இப்படி அடிப்படை மாறும் போது எல்லாமே மாறித்தானே போகும்.
வினைகளை தீர்க்க எடுத்த இந்த ஜென்மமானது வினைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளவே அமைந்துவிட்டது. உண்மையில் நமக்கு நமது மனதைப் பற்றியும், நமது உடலைப் பற்றியும் அறியும் தன்மை அமைந்துவிட்டால் நாம் அறிவுள்ளவர்கள் ஆவோம்.பகுத்தறிவு என்பது இதுதான்
நாம் உடலைப் பற்றி அறிந்து கொண்டால் தேவையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மனதைப் பற்றி அறிந்து கொண்டால் ஆசையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இது இரண்டையும் அறிந்து கொண்டால் எல்லாம் அறிந்தவர் ஆகலாம்
“தன்னைத்தான் அறிய வேணும்
சாராமல் சார வேணும்
பின்னைத் தான் அறிவதெல்லாம்
பேயறிவு ஆகுமடி”
— அகப்பேய் சித்தர்
தேவையைப் பற்றியும், ஆசையைப் பற்றியும் அறிவு இல்லாதவர்களுக்கு வேறு என்ன தெரிந்து இருந்தாலும் அந்த தெரிந்து கொள்ள உதவிய அறிவு பேயறிவு ஆகும். பேயறிவு என்று அவர் சொல்லக் காரணம், அந்த அறிவு நன்மையை தராது, பாபத்தைப் போக்காது, புண்ணியத்தை சேர்க்காது, முக்கியமாக தன்னை அறிந்திருக்காது.
தன்னைத் தான் அறியும் போது நம்முடைய வினைகள் நமக்கு தெரியத் தொடங்கும். நம்முடைய வினைகள் நமக்கு தெரியத் தொடங்கும் போது நாம் எதை, எப்படியெல்லாம், எப்போது அனுபவிக்க வேண்டிவரும் என்பது தெரிந்துவிடும். அப்படி தெரியும் போது நமக்கு பயம் போய்விடும், பயம் போய்விட்டால் தெளிவு கிடைத்துவிடும். தெளிவு வந்துவிட்டால் சிந்தனை சரியாய் அமையும்.
சிந்தனை சரியாய் அமையும் போது செயலும் சரியாய் அமையும். சரியாக அமைந்த செயல் நன்மையை மட்டுமே தரும். அப்போது பாபம் பின் தொடராது.
பாபம் தொடராத வாழ்க்கை அமைவது புண்ணியத்திலும் பெரும் புண்ணியம். அது எல்லோருக்கும் அமைவது இல்லை. அப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் வருவதில்லை. அப்படி சிந்தனை வர வேண்டும் என்றாலே அதற்கு ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதிகளில் 5-ம் இடம் வலுத்திருக்க வேண்டும்
5-க்குடையவன் கெடாமல் இருக்க வேண்டும். முக்கியமாக மனோகாரகன், உடல் காரகனாகிய சந்திரன் கெடாமல் இருக்க வேண்டும். 5-ம் இடத்தில் பாபிகள் அமையாமல் இருக்க வேண்டும். அப்படியே அமைந்தாலும் சுபரால் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். இது போல் இன்னும் பல விதிகளை ஜோதிடம் சொல்கிறது இந்த பாப புண்ணிய விஷயங்களை நாம் ஜோதிடத்தின் மூலமாகவே அறிய வேண்டியிருக்கிறது நமக்கு வேறு வழியில்லை
அதனால் பாப புண்ணியங்களை ஜோதிடத்தின் மூலமாகவே அறிந்து வாழ்வாங்கு வாழ்வோம்
வணக்கம் ஐயா, உங்கள் வலைத்தளம் அருமையான ஆரம்பம்.. தொடர இறையருள் துணை நிற்கும்.
வலைத்தளம் வளர உங்களுடன் துணைநின்ற இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களது பணி சிறப்புற அமைய வேண்டுகிறேன். நானும் இதில் பங்குகொண்டு பணியாற்றியதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
வாழ்க பொருளுடன் வளர்க அருளுடன்
வணக்கம் ஐயா, உங்களது வலைத்தளம் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இது மேலும் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
உற்றுப்பார் உணரப்பார் என்ற பகுதியை படித்தேன் மிக்க மகிழ்ச்சி.
வாழ்க பொருளுடன் வளர்க அருளுடன்.
Information is helping me to proceed further