Skip to content
நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு.
அதில் ஒன்று யோக பாதை.
யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு.
ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என
ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது.
ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில்
குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது
அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது.
குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில்
முக்கோண பெட்டகத்தில் இருக்கிறது.
பாம்பின் வடிவில் மூன்று சுற்று சுற்றி
மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை
தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்ரத்திற்கு உயர்த்தினால்
ஞானம் பிறக்கும் என்பது குண்டலினி யோகத்தின் அடிப்படை.
பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல்
ராஜ யோகத்திற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது.
குண்டலினியை பற்றி பேசுபவர்கள்
பெரும்பாலும் பதஞ்சலியை துணைக்கு கூப்பிடுவார்கள்.
அவரின் சிலையை வைத்து வழிபடுவார்கள்.
முன்பு ராஜயோகத்தை பயில்பவர்கள் குருவை நாடி
தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள்.
யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதால்
இதற்கு ராஜயோகம் என பெயர்.
மேலும்
ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது ராஜயோகம் என பெயர் பெற்றது.
அரசாங்க (ராஜாங்க) விஷயங்கள் எப்படி அனைவருக்கும் தெரியக்கூடாதோ
அதுபோல
ராஜ யோக விஷயங்கள் தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதுமானது.
ஆனால் தற்சமயம் ராஜயோகம் நடைபாதையில் விற்கும் மலிவு சரக்காகிவிட்டது.
எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடாதா?
இதுக்கும் ரகசியமா?
ஏதாவது ஜாதி சார்ந்த கட்டுப்பாடுகள் உண்டா என நினைத்தால் அது தவறு..!
குண்டலினி யோகம் என்பது ஒருவர் மற்றொருவருக்கு கற்று தரும் விஷயமல்ல.
இது குரு சிஷ்யன் என்ற இருவருக்கும் ஏற்படும் அனுபவம்.
அதனால் அவர்களால் அதை விவரிக்க முடியாது.
அனுபவிக்க மட்டுமே முடியும்
பல்வேறு ராஜயோகிகள் குண்டலினி அனுபவத்தை
கலவி இன்பத்துடன் ஒப்பிட்டு சொல்லுவார்கள்.
கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் தாம்பத்திய உறவு இயல்பானது
இதற்கு கடினமான பயிற்சிகள் தேவையில்லை.
இருவருக்கும் என்ன நிகழ்ந்தது என நமக்கு தெரிந்தாலும்,
அவர்களிடம்
உங்களுக்குள் நடந்த விஷயத்தை படிப்படியாக கூறுங்கள்
என கேட்பது எப்படி அபத்தமான விஷயமோ
அது போன்றது குண்டலினி அனுபவத்தை விவரிக்க சொல்வதும்
என்பது என் கருத்து.
குண்டலினி சக்தி என்பது உண்மை,
அதனால் ஏற்படும் அனுபவங்கள் உண்மை.
ஆனால் அதற்காக தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே புரியாதது .
உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற
நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை,
உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும்.
இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி அல்ல வேறு எதுவுமே நிகழாது.
சில யோக கழகங்கள் கார்ப்பரேட் மேனேஜர்களுக்கான குண்டலினி யோகம்,
குடும்ப பெண்களுக்கான குண்டலினி யோகம் என நடத்துகிறார்கள்.
இன்னர் மெடிக்கல், எஞ்சினியரிங் , லா என்றல்லாம் பயிற்சிகள்
குண்டலினியின் பெயரால் நடக்கிறது.
இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா?
தினமும் வீட்டிலும், வாரம் ஒரு முறை
கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும்,
தினமும் புகைப்பிடிப்பவர்களுக்கும்,
தங்களின் உடலை சிறு அசைவு கூட செய்யாமல்
ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகள்.
இவர்களுக்கு ஏழு நாளில் குண்டலினி உயர்த்திகாட்டுகிறார்களாம்
இந்த யோக கழகங்கள்.
இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் எவரும்
தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என கூற மாட்டார்கள்.
பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என கூறுவார்கள்.
இது எப்படி நிகழ முடியும்?
ஒரு ஏமாற்று பேர்வழி பலரிடம் பணம் பறிக்க
கடவுளை காட்டுகிறேன் என அனைவரிடமும் பணம் வசூலித்து
மலை உச்சிக்கு கூட்டு சென்றானாம்.
அங்கே கடவுள் தெரிகிறார்.
அவர் பத்தினி கணவனின் கண்களுக்கே தெரிவார்
என சொன்ன கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அது போன்றதே இந்த குண்டலினி அனுபவமும்.
ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தி பயிற்சிக்கு வந்தாகிவிட்டது.
தன் அருகில் இருப்பவனோ பாம்பு போல நெளிகிறான்.
நாம் சும்மா இருந்தால் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ
என தங்களை தாங்களே பலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
Go to Top
It’s nice.u have given many informative information ayya..I m trying to implement..thank you ayya