இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப்
போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே
வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான்.
இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை
உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்;
அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை வழங்க
முடியாது. எனவே மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சதாசிவ வடிவத்தையும் மட்டுமே வழிபட
வேண்டும் என்பது தெளிவாகிறது.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,
“யாதொரு தெய்வம் கொண்டிர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும்; பிறக்கும்; மேல்வினையும் செய்யும்;
ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே”(115)
என்று அருணந்தி சிவம் அருளிச் செய்துள்ளார்.
இன்னும்,
அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை
எல்லாம் வழங்க, அவற்றால், இயலாது.
இதற்கு, “அத்தெய்வம் அத்தனைக் காண்” என்னும் பிரமாணம் தெளிவாக உள்ளது.