ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்! முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.
தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு வேசான வருத்தம்!
சில விநாடிகள் யோசித்தவர். “எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும்கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?” என்று பணிவோடு கேட்டார்.
மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும்,
அவரால் முழு ஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோ தானோவென்று வீடு கட்டினார்.
“வேலையிலிருந்தே ஓய்வுபெறப் போகிறோம்.
இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது” என்கிற அலட்சிய மனப்பாங்கு!
வேலை யெல்வாம் முழுமையாக முடிந்த பிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம்,
சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார்.
“இந்தாருங்கள். இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு!
எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி! ” என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை.
“என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத் தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால்
இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.
இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே!
சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே” என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
நமக்கான வாழ்க்கையை நாம் தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல்,
பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம்.