திருமந்திரமாலை
பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்
அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே
சிவபெருமான் விழுமிய முழுமுதலாம் பரனாய் நின்று தன் திருவடியான் உணரப்படும்
உவமையிலாக் கலைஞானமாகிய அபரமும் மெய்ஞ்ஞானமாகிய பரமும் முறையே சிவனடியே சிந்திக்கும்
திருப்பெருகு சிவஞானத்தார்க்கும், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானத்தார்க்கும்
நீங்காது உடனாய் நிறைந்து அருளிச் செய்தனன்.
அங்ஙனம் அருளிச் செய்து உலகினில் சிவபுண்ணியங்களுள் எல்லாம் மேலானது சிவ வழி பாடாகிய பூசையாகும்.
அச் சிவபுண்ணியத்தைத் தானே செய்து காட்டும் வழி காட்டியாய் முன்னின்று
திருவிடைமருதூரில் தானே தன்னை வழிபட்டுங் காட்டியருளினன்.
அம் முறையான் சிவவுலகத்தவர் வழிபாடும் புரிவாராயினர்.
அவர்களால் வழிபடப்படும் நந்தியும் அவர்கட்கு உறுதியளித்தருளும்படி ஆகமமாக ஓங்கி நின்றருளினன்.
‘ஆகமம் ஆகிநின்றண்ணிப்பான் தாள்வாழ்க’ என்பதும் இவ்வுண்மையை வலியுறுத்தும்.