அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.
அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது.
ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.
ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார்.
‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’
‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’
‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி.
‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்?
அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’
குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும்
அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.