அன்பார்ந்த இணைய தள வாசகர்களுக்கு,
ஜோதிடத்தில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். இதில் சிக்கல் என்னவென்றால் எல்லா விஷயங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவுமே இருக்கிறது.
ஆனால் யாருக்கு உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்கிறது என்று அறிந்து சொல்வதில்தான் குழப்பமும், சிக்கலும் வருகிறது.
7ல் செவ்வாய் இருந்தால் விவாக தோஷம், களத்திர மரணம் பலன். இது நிஜம். பல இடங்களில் இது பொய்யாகிறது. சில இடங்களில் இந்த பலன் நிஜமாகிறது. இது எப்படி? ஏன் இப்படி வினா உருவாகிய பின் விடை தேடி, அடைய பல கிரந்தங்கள் ஜோதிட ஆராய்ச்சி நூல்கள் எனத் தேடி பின் அனுபவஸ்தர்கள் அருகில் இருந்து அவர்களிடம் பாடம் ஒரு 5-10 ஆண்டுகள் முடித்த பின்னும் ஏன் இப்படி என்ற கேள்வி மட்டுமே தங்கிக் கொண்டே இருக்கிறது. ஆயுள் சம்பந்தபட்ட விசாரத்தில் இந்த சிக்கல் மேலும் இறுகுகிறது. இரட்டை ஜெனனத்திலும் இப்படியே இதை சரி செய்ய இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது.
1. கணித முறை: முறையான தெளிவான கணிதம் அனுபவத்தில் எத்தனை சரியாக கணிதம் செய்து பார்த்தாலும் பலன்கள் பல சமயங்களில் தப்பிவிடுகிறது. அப்படி தப்பிவிடும் போது கணிதத்தில் தவறா? அல்லது கணிதத்தை உருவாக்கியவர் தவறா? என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. காரணம் முழு மனதுடன் சந்தேகம் தெளிய வேண்டும் என்கிற ஆசையிலும் மிக கவனமாக கணித்துப் பார்த்தாலும் முடிவு தவறும் போது ஒரு சோர்வு ஏற்படுகிறது.
இப்போது நான் சொன்னது எல்லா ஜோதிடர்களுக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முறையாவது நிகழ்ந்திருக்கும்.
2. உபாசனை பலம்: இதற்கு குரு வேண்டும். நியம நிஷ்டைகள் வேண்டும். திட வைராக்கியம், இப்படித் தான் வாழ்வேன் என்ற தீர்மான சிந்தனை, அதை செயல்படுத்தும் தைரியம் இது எல்லாம் வேண்டும், இது எல்லாம் இருந்தால் பலன்கள் தவறுவது தவிர்க்கப்படும்.
உண்மையைச் சொன்னால் கணிதத்தின் மூலம் என்ன பலன் சொல்ல வேண்டுமோ, அந்த பலனை சரியானபடி முழுமையாக சொல்ல முடியும்.
வருஷாதி நூலில் சொல்லியிருப்பது போல் குரு வாக்கும், குல தெய்வ அனுக்கிரகமும், இஷ்ட தெய்வ சித்தியும் இருந்தால் பலன்கள் தவறாது.
அனுபவஸ்தர்கள் இது உண்மை தான் என்று சொல்கிறார்கள். ஒத்துக் கொள்ளவும் செய்கிறார்கள். நான் முயன்று பார்த்ததில் எனக்கும் இது சரியென்றுபடுகிறது. கணிதத்தை மட்டுமே கருத்தில் கொண்டிருப்பவர்கள் இதையும் கருத்தில் கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கலாம்.