ஜோதிடம்
மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அடுத்த வினாடி முதல் அடுத்த ஜென்மம் வரை என்ன நடக்கும் எப்படி எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பது இயற்கையே.
இந்த ஆவலை பூர்த்தி செய்ய உள்ள கலை ஜோதிடக் கலை மாத்திரமே. வேறு கலைகள் மூலம் இருக்கும் இருப்பில் சந்தோஷப்படலாம் அல்லது சங்கடங்களை தற்காலிகமாய் குறைத்துக் கொள்ளலாம், உதாரணமாக சோகமாக இருக்கும் போது ஆடல், பாடல் மூலம் சோகத்தை குறைத்துக் கொள்வது போல்.
ஆனால் ஜோதிடத்தின் மூலம் நீ சோகமாய் இருப்பாய், ஆடல், பாடல் மூலம் உன் சோகத்தை குறைத்துக் கொள்வாய் என சொல்ல முடியும்.
இது தான் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் ஜோதிடம் தனியிடத்தை பெற்றுள்ளதற்கு காரணம். அதனால் தான் எந்த ஒரு விஷயத்திலும் பூரித்து புளகாங்கிதம் அடையும் நம் முன்னோர்கள் ஜோதிடத்தை வேதத்தின் கண்ணாகவே போற்றி மகிழ்ந்தனர்.
ஜோதிட சாஸ்திரம் மக்களுக்கு பலப்பல விஷயங்களில் முடிவு எடுக்க ஒரு நல்ல சாஸ்திரம். எந்த முடிவு எடுப்பது என்று பல நிலைகளில், பல சமயங்களில் நாம் தவிக்கும் போது நமக்கு கை கண்ட விளக்காய் இருப்பது இந்த சாஸ்திரம் மட்டுமே.
வேறு எந்த சாஸ்திரத்தின் மூலமும் இதை அறிந்து கொள்ள முடியாது. அதனால் தான் ஜோதிடம் இன்று வரை மக்களிடையே இருக்கிறது. இங்கு நாம் முக்கியமாய் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
ஜோதிடம் என்பதும், ஜோதிடர் என்பதும் வேறு வேறு.
இதன் இரண்டிலும் உள்ள வித்தியாசம் தெரியாததால் தான் மக்கள் ஜோதிடத்தை மறுக்கின்றனர் அல்லது வெறுக்கின்றனர்.
இயற்கையின் தன்மையில் ஏற்படும் மாறுதல்கள் மனிதர்களை பாதிப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். சித்திரை மாதத்து வெயிலின் கொடுமை அறிந்தவர்கள், மார்கழி மாதமே சிறந்தது என்று சொல்லுவார்கள்.
சித்திரையில் சூடு அதிகம். வெப்பத்தின் நிலையில் நீர் நிலைகளில் நீரின் அளவு குறையும். இது அனுபவம். வழி வழியாய் நம் முன்னோர்கள் சொல்லி நாமும் அனுபவித்து நம் பின் உள்ளவர்களுக்கு கூறுகிறோம்.
இது போலத் தான் ஜோதிடமும் கிழமை-திதி-நட்சத்திரம்-கிரகங்கள்-கிரகங்களின் இணைவுகள் கொண்டு இவைகள் இப்படி இருந்தால் இப்படி நடக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
இது கணித சம்பந்தபட்ட விஷயம், கணிதத்தின் மூலம் அமாவாசை-பௌர்ணமி-கிரஹண காலம் போன்றவற்றை அறிவது போலவே ஒவ்வொரு மனிதருக்கும் நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிட சாஸ்திரம்.
மனிதருக்கும் விண்ணில் இருக்கும் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்து அதன் மூலம் மனிதர்கள் அடையும் நன்மை, தீமைகளை வரையறுத்து சொல்வதற்கு உண்டான கலை ஜோதிட கலை மட்டுமே.
ஜோதிட கலைக்கு பல முகங்கள் உண்டு. நாட்டு ஜோதிடம், வீட்டு ஜோதிடம், கர்ம ஜோதிடம் இப்படி இன்னும் பற்பல வகை உண்டு, அவைகளை அவ்வப்போது பார்க்கலாம். ஜோதிடம் என்பது அடிப்படையில் கணிதம் சம்பந்தப்பட்டது. அதனால் இது அறிவியல் என்று சொல்வது முற்றிலும் உண்மை.
பூமியின் இயக்கம் மற்ற கிரகங்களின் சலனங்கள் போன்றவற்றை கணிதத்தின் துணை கொண்டு தான் துல்லியமாய் அறிய முடியும். இப்படி துல்லியமாய் அறிந்த பின் பலன் சொல்ல வரும் போது ஜோதிடம் வேறு ஒரு நிலைக்கு நகர்ந்துவிடுகிறது.
கணிதம் கடந்து பலன் சொல்பவரின்-ஒழுக்கம்-இறைபக்தி-குரு பக்தி-குல தெய்வ ஆராதனை-இஷ்ட தெய்வத்தின் வரம் போன்றவற்றை கொண்டே பலன்கள் நடப்பதும், நடக்காமல் போவதும் உண்டாகிறது.
ஜோதிடர் மேற் சொல்லிய விஷயங்களை அனுபவத்தில் கொண்டவராக இருந்தால் கணிதத்தில் ஏதாவது காரணத்தால் தவறு ஏற்பட்டிருந்தாலும் கூட பலன்கள் சரியாக வரும், இது அனுபவம். அப்படி இல்லாத போது ஜோதிடர் தலை குனிவதை தடுக்க முடியாது. அப்படி தலை குனிய ஜோதிடம் காரணம் அல்ல.
அதனால் தான் நான் முன்பே சொன்னேன்
ஒரு நாள் என்பது 60 நாழிகைள் அல்லது 24 மணி நேரங்கள் கொண்டது. சூரியனுடைய நகர்தலே நாளின் அடிப்படை அதனால் இந்திய ஜோதிடம் சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் வரை உள்ள கால பகுதியையே ஒரு நாள் என கணக்கில் கொண்டது.
நாட்கள் காலத்தோடு தொடர்பு உடையதால், மனிதனும் காலத்தோடு மிக நெருங்கிய தொடர்பு உடையவனாக இருக்கிறான். சுழலும் கோள்களின் தாக்கம் காலத்திற்கு ஏற்படும் போது காலத்தோடு தொடர்பு உடைய மனிதனும் அதனுடைய நிலைகளை அனுபவிக்க வேண்டியவனாகிறான்.
பனி காலத்தில் குளிரின் கடுமையால் மனிதன் கம்பளியை தேடுவது அதனால் தான். கடும் வெயில் காலத்தில் பருத்தி ஆடையை அணிவதும் அதனால் தான். காலத்தின் சுழற்ச்சிக்கேற்ப மனிதன் தான் வாழும் முறையை இயற்கையோடு ஒட்டி அமைத்துக் கொண்டுள்ளான், காலத்தை விட்டு அவனால் வெளியே செல்ல முடியாது, காலமும் அவனை வெளியே விடாது.
காலம் செயல்படும் விதத்தினை ஒருவாறு அறிந்து கொள்ள வானியல் சாஸ்திரம் நமக்கு நன்கு உதவும். காற்று காலத்தில் பஞ்சு விற்க செல்ல கூடாது – மழை காலத்தில் உப்பு விற்க செல்லக் கூடாது. இதை நம் முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் பழமொழியாகவே சொல்லி வைத்திருக்கின்றனர்.
அந்த காலங்களில் பிரயாணம் என்பது அதுவும் தொலை தூர பிரயாணம் என்பது நிரம்ப சிக்கலான விஷயம். அந்த காலங்களில் நாள் – வேளை – நட்சத்திரம் பார்த்தே பிரயாணம் தொடங்குவார்கள். பிரயாணம் செய்பவர்கள் நல்லபடியாய் வீடு திரும்ப காலத்தின் துணை மிக மிக அவசியம் என்பதை நம் முன்னோர்கள் மிக நம்பினார்கள்.
அது அவர்களுக்கு பலனையும் தந்தது. அது இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று பார்த்தால் பெருமளவு குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும், காரணம் பிரயாணம் எளிமையாகிவிட்டது. சுமார் 2000 கிலோ மீட்டரை கடக்க 4 மணி நேரமே போதும் எனும் நிலை இப்போது.
பண்டைய காலத்தில் இப்படியில்லையே. நம் இப்போதைய நிலையில் 4 மணி நேர கால நிலைகளை கணக்கில் கொண்டால் போதும், பண்டைய காலத்தில் 1 வருட கால நிலைகளை கணக்கில் கொள்ள வேண்டிய நிலை. அதனால் பிரயாணத்திற்க்கு நல்ல நேரம் அன்று தேவைப்பட்டது, இன்று அதன் தேவை அதனளவில் குறைந்துவிட்டது. எப்படியானாலும் காலத்தின் நிலையறிந்து மனிதன் செயல்பட்டால் வாழ்க்கைப் பிரயாணம் நல்ல பல பலன்களோடு சந்தோஷமாய் செல்லும்.
அதற்கு வழி கூறுவது ஜோதிடம், நல்ல நாளையும், நேரத்தையும் நமக்கு அறிவிப்பது ஜோதிடம். ஜோதிடம் எல்லா பிரிவினர்க்கும் பயன்படக் கூடியது.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் புருஷார்த்தங்களை மனிதன் பெறுவதற்க்கான வழி வகைகளை போதிக்கும் இந்து மத தத்துவங்களுக்கு ஆதாரமாக இருப்பது வேதங்களாகும். அதனுடைய காலமோ ———— வேதத்தின் கண்ணாக ஜோதிடத்தை சிறப்பிப்பதால் இதனுடைய காலமும் அந்த அளவு பழமையானது ஆகும்.
அருமையான அறிமுகம் ஐயா, நன்றி.