நான் பேசுவதைக் கேட்டால் அவர்களுக்கு இந்த சொசைட்டியிடம் நம்பிக்கை போய்விடும் என்ற பயம் தான் காரணம்,
குறிப்பிட்ட சிலர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் நியதிகளும் அதையே கூறுகின்றன
அங்கு சேர்பவர்கள் குதுமி மற்றும் மொரியாவிடமிருந்தும், அவர்களின் பிரதிநிதிகளான
திரு. ஜட்ஜ் மற்றும் திருமதி. அன்னிபெசன்டின் மூலமே உபதேசங்களைக் கேட்க வேண்டும் .
இந்த சொசைட்டியில் சேர்வது என்பது ஒருவர் தன் சுதந்திரத்தையே அடகு வைப்பதாகும்.
இப்படிப்பட்ட ஒருகாரியத்தை நிச்சயமாக என்னால் செய்ய முடியாது.
அப்படிச் செய்கின்ற ஒருவனை இந்து என்று அழைக்கவும் என்னால் இயலாது.
திரு. ஜட்ஜிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் உயர்ந்தவர், திறந்த மனம் படைத்தவர் நாணயமானவர் எளிமையானவர்
தியாசஃபிக் சொசைட்டியின் இதுவரையிலான பிரதிநிகளுள் மிகவும் சிறந்தவர்.
இவரும் திருமதி. பெசன்டும் தங்கள் மகாத்மாக்களே சரியானவர்கள் என்று அடித்துக் கொள்கிறார்கள்,
இதை குறை கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை .
வினோதம் என்னவென்றால் இரண்டு பேரும் உரிமை கொண்டாடுவது ஒரே மகாத்மாவையே,
உண்மை, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
அவரே நீதிபதி, இரண்டு பக்கமும் சமமாக இருக்கும்போது நீதி வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை
இப்படியெல்லாம்தான் அவர்கள் அமெரிக்கா முழுவதும் என் வளர்ச்சிக்கான வழி வகுத்தார்கள்!