இதையெல்லாம் இப்போது சொல்லியிருக்க மாட்டேன். நம் நாட்டு மக்கள் விரும்பியதால் கூற வேண்டியதாயிற்று .
கடந்த மூன்று ஆண்டுகளாக இதைப்பற்றி நான் வாயைத் திறந்ததே இல்லை.
மௌனமே என் குறிக்கோளாக இருந்தது.
ஆனால் இன்று வெளியே வந்துவிட்டது. விஷயம் அத்துடன் முடியவில்லை.
தியாசபிக் சொசைட்டியினர் சிலரை நான் சர்வசமயப் பேரவையில் பார்த்தேன், அவர்களோடு பேசவும் கலந்து பழகவும் விரும்பினேன்.
அப்போது அவர்கள் முகத்தில் தோன்றிய வெறுப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது,
தேவர்கள் கூடும் இடத்தில் இந்தப் புழுவிற்கு என்ன வேலை? என்று கேட்பதைப்போல் இருந்தது
அது. சர்வசமயப் பேரவையில் நான் பெயரும் புகழும் பெற்றதைத் தொடர்ந்து
பல்வேறு பணிகளும் வந்தன. ஆனால் ஒவ்வொரு படியிலும் தியாசபிக் சொசைட்டியினர் என்னைச் சிறுமைப்படுத்தவே முயன்றனர்.
என் சொற்பொழிவுகளுக்கு வர வேண்டாம் என்று தியாசஃபிக் சொசைட்டியினர் தடுக்கப்பட்டனர்.