காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன.
பல சாகும் தருவாயில் இருந்தன.
விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது.
“காட்டில் பாவம் அதிகரித்து விட்டது.
இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ,
அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்”
என்று சொன்னது சிங்கம்.
ஒருவரும் பேசவில்லை.
சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும்,
தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது.
உடனே நரி, “மாண்பு மிகு அரசே, நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறீர்கள்.
கேவலம், இந்த ஆடுகளை நீங்கள் சாப்பிட்டதெல்லாம் ஒரு பாவமா?” என்றது.
எல்லா விலங்குகளும் கைதட்டி நரியின் பேச்சை ஆமோதித்தன.
அதன்பின் புலி, கரடி, யானை போன்ற பெரிய விலங்குகளைக்
குற்றம் சாட்ட எந்த விலங்குக்கும் தைரியமில்லை.
அப்போது ஒரு கழுதை சொன்னது
, “என்னுடைய பேராசையால் எனக்கு உரிமை இல்லாத இடத்தில்
புல்லைத் திருடிச் சாப்பிட்டு விட்டேன்”
உடனே எல்லா விலங்குகளும், “கழுதை செய்தது மிகப் பெரிய பாவம்.
எனவே அதைப் பலி கொடுத்துவிடலாம்” என்று ஒருமித்த குரலில் சொல்லின.
எங்கும் அப்பாவிகளே பலியாகின்றனர்.