நீ
ஆமையைப் பற்றிக் கேட்டாயல்லவா..?
ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை.
தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும்.
பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும்.
ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும்.
‘அதுதான் தனக்கான இடம்’ என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும்.
முதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே இடத்தில்தான் காலம் முழுவதும் முட்டையிடும்.
கடல் வாழ் உயிரிகளில் தன் வாழ்நாளுக்குள் அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய உயிரினம் ஆமைதான்.
ஆனால், பிற உயிரினங்களுக்கு இருப்பதைப்போல வசதியான துடுப்புகள் ஆமைக்கு இல்லை.
உடல் வடிவமும் நீந்த ஏதுவாக இல்லை.
ஆனால், அது பிற உயிரினங்களைவிட வேகமாகப் பயணம் செய்யும்.
முட்டையிடும் உணர்வு ஏற்படும்போது,
பரந்து விரிந்த இந்தக் கடற்பரப்பில் எவ்வளவு தொலைவுக்கு அப்பால் இருந்தாலும்,
அதிவேகமாகப் பயணித்து தன் பழைய இடத்தைத் தேடி வந்துவிடும்…
“வசதியான துடுப்புகள் இல்லாத ஆமை, அவ்வளவு வேகமாக எப்படிப் பயணிக்கிறது?”
“இங்குதான் நாம் ஆமையாக மாற வேண்டும்.
தனக்குத் துடுப்புகள் இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டு முடங்கிப்போகவில்லை ஆமை.
அது இயற்கையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது.
தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
அது செல்ல திட்டமிட்டுள்ள திசையில், அதிவேக நீரோட்டம் தொடங்கும் நேரத்துக்காக அது அமைதியாகக் காத்திருக்கிறது.
நீரோட்டம் தொடங்கிய விநாடியில் அதில் ஒன்றிவிடுகிறது.
நீரின் தன்மைக்கேற்ப ஏறி, இறங்கி, வளைந்து, நெளிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது.
அந்த நீரோட்டமே ஆமையை அதன் இலக்கில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
துடுப்பை அசைக்காமல் நெடுந்தொலைவு பயணத்தை அது கடந்துவிடுகிறது…
“ ‘ஆமைபோல் வேகம் கொள்’ என்பதன் உள்ளீடு இப்போது உங்களுக்குப் புரிகிறதா?
உங்களுக்கான இலக்கைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
அது உங்கள் இயல்புக்கேற்ற இலக்குதானா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
`மற்றவர்களுக்கு இருப்பது போன்ற வசதிகள் நமக்கு இல்லையே…’
என்று வருந்தி முடங்கிப் போகாமல், நம் இலக்கைத் தொட
என்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடலோடு இருங்கள்.
உங்களுக்கான நீரோட்டத்தை அடையாளம் கண்டதும் களத்தில் இறங்குங்கள்.
நிச்சயம் அந்த நீரோட்டம், உங்களை உங்கள் இலக்கில் கொண்டு போய் நிறுத்தும்.
வெற்றி என்பது திறனின் அடிப்படையில் மட்டுமல்ல…
அந்தத் திறனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
ஆமை நமக்குக் கற்றுத்தரும் பாடம் அதுதான்…”