மனிதர்கள் புசிக்கும் அன்னமானது முதலில் ஆமாசயத்தில் பிரவேசித்து அப்புறம் பச்சமானாசயத்தில் சேர்ந்து அதற்கு கீழ்பாகத்திலுள்ள ஜடராக்கினியால் பக்குவமாய் அதன் பிப்பியானது பக்குவாசயத்தில் சேரும். பச்சயமானாசயத்தில் பக்குவமான அன்னரசம் நாபிநாளத்தில் பிரவேசித்து வாயுவினால் சகலநாடிகளின் மார்க்கமாய் சரீரத்தில் வியாபிக்கும். நாடி ஸ்தானமும் கதியும் ….. நாடி ஸ்தானம் மஹா நாடிகள் என்கிற எட்டு பாதங்களுடன் சேர்ந்திருக்கும். அந்த எட்டு நாடிகளில் நாலு நாடிகள் பின்பாகத்திலும், நாலு நாடிகள் மார்பிலும் வியாபித்து இருக்கின்றது. ஊர்த்துவ காமி நாடிகள் ….. ஆமை உருவமாகிய நாபி குதஸ்தானத்தை வியாபித்து இருக்கும். நாலு நாடிகள் சரீரத்தின் ஊர்த்துவ பாகமாய் புறப்பட்டு சிரசு வரையிலும், வியாபித்து இருக்கிறது. மார்பில் உள்ள நாலு நாடிகள் பாதம் வரையிலும் வியாபித்து இருக்கும். ஊர்த்துவ பாகமாய் போகிற நான்கு நாடிகள் இரண்டு இரண்டாய் பிரிந்து எட்டாக பரிணமித்து அதில் ஒவ்வொன்று ஐந்தாக பிரிந்து இருக்கிறது. ஐந்தாக பிரிந்து நாடிகளில் இரண்டு நேத்திரங்களிலும், இரண்டு நாசிகையின் துவாரங்களிலும், ஒன்று நாக்கிலும், வியாபித்து இருக்கும். மற்ற இரண்டு நாடிகள் செவிகளிலும், மற்ற இரண்டு நாடிகள் மேல்கீழ் உதடுகளிலும் வியாபித்திருக்கும். இதே பிரகாரம் மற்றொரு நாடியால் உண்டான ஒன்பது நாடிகளுக்கு சகாயமாயிருந்து மூடவும் திறக்கவும் செய்கின்றது. சிரசில் வியாபித்த மேல்கூறிய இரண்டு நாடிகள் தவிர இரண்டு நாடிகள் கைகளில் வியாபித்து ஐந்தைந்து கிளையாக பிரிந்து விரல்களில் சேர்ந்து கைகள் மூடவும் நீட்டவும் செய்கின்றது.