ஸ்ரீசங்கரரின் ஞானம். 1

எப்படி ஒளியின் உதவியில்லாமல் ஒரு பொருள் ஒரு பொழுதும் பார்க்கப்படுவதில்லையோ, அப்படி மனதில் ஆராய்ச்சியில்லாமல் எதனாலும் ஞானம் அடையப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது. கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 46

நீ ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும் போது உன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களை உற்று நோக்கி அறிந்து கொள். நீ வாழும் இடத்தில் என்ன கிடைக்கின்றது எனபதைப் பற்றியும் நீ அறிந்து கொள். ஆனால், உன் வாயை மட்டும் திறவாதே. உங்களது அன்னைக்குப் பணி செய்வதாகச் சாக்குக்கூறி உலகப் பற்றிற்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 8

பொருள்,சுற்றம், யெளவனம் முதலியவற்றைப் பற்றி கர்வம் கொள்ளாதே, காலம் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும் கொண்டு போய்விடும். மாயாமயமான இவ்வனைத்தையும் விட்டு பிரம்மபதத்தை அறிந்து கொண்டு அதனுட் புகுவாயாக. காமத்தையும், கோபத்தையும், பேராசையையும், மதிமயக்கத்தையும் ஒழித்து அஞ்ஞானத்தினின்று விடுபட்ட உனது உண்மை ஸ்வரூபத்தைப் பார். ஆத்மஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் வீழ்ந்த துன்பத்திற்காளாகிறார்கள். சத்துருவென்றும், மித்திரனென்றும், புத்திரனென்றும் உறவினனென்றும், வேற்றுமையைப் பாராதே. விஷ்ணுபதத்தை நீ விரும்பினால் யாரிடத்தும் பகைமையும், நட்பும் பாராட்டாமல் எல்லோரையும், எல்லாவற்றையும் சமமாகப்பார். 

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 7

மதிகெட்டவனே! பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி, வீணாண ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்க‍ளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப்படுத்திக்கொள். பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பதென்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.