ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 12

புண்ணியமும், பாவமுமில்லை, இன்பமும், துன்பமும் இல்லை, மந்திரங்களும், தீர்த்தங்களும், வேதங்களும், யாகங்களுமில்லை, நான் புசிப்பவனன்று, புசிக்கப்படுவதுமன்று, புசிக்கும் செயலுமன்று, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான் சிவமே நான். எனக்குச் சாவில்லை, பயமில்லை, ஜாதிபேதமில்லை, எனக்குத் தாயில்லை, தந்தையில்லை, பிறப்புமில்லை, எனக்குச் சுற்றமுமில்லை, நட்புமில்லை, எனக்கு குருவுமில்லை, சீடனுமில்லை, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 4

இறந்தால் மறுபடி பிறப்பு, பிறந்தால் மறுபடி இறப்பு, மறுபடியும் ஒரு தாய் வயிற்றில் முடங்குதல், கரைகாணாததும் கடத்தற்கரியதுமான இவ்வாழ்க்கைக் கடலினின்று என்னைக் காத்தருளும் பகவானே! பகலுக்குப்பின் பகலும், இரவுக்குப்பின் இரவும், பக்ஷங்களும், மாதங்களும், கோடைகாலமும், குளிர்காலமும், வருஷத்திற்குப் பின் வருஷமும் மாறாமல் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. வீண் ஆசைகளும் ஸங்கல்பங்களும் எவனையும் விட்டுப் போவதாயில்லை.