சீர் வளர் கோவை மாநகரில் கீழைச் சிதம்பரம் எனும் பெயர் பெற்ற பேரூரில் பட்டீஸ்வரப் பெருமானும் பச்சை நாயகி அம்மையும் அருள் பாலிக்கும் திருத்தலத்தில் இருந்து நொய்யல் ஆற்றங்கரை வழியே வேடபட்டி செல்லும் சாலையில் உள்ள கீழைச் சித்திரச் சாவடி என்னுமிடத்தில் இடிந்த கோவில் என்று ஊர் மக்களால் அறியப்பட்டு வந்த கோவிலே ஸ்ரீஉமாமகேஸ்வரர் ஆலயம்.
1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி தை மாதம் அஸ்த நட்சத்திரம், பஞ்சமி திதி கூடிய சுப தினத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. உயர்திரு. ஙி.சத்தியநாராயணன், அவரது துணைவியார் திருமதி.கீதா மற்றும் அவர்தம் குடும்பத்தாரின் பொருளுதவியாலும், மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் வழிகாட்டுதலாலும், ஆத்மா அவர்களின் மேற்பார்வையிலும், ராஜ ராஜேஸ்வரி பிரார்த்தனா டிரஸ்ட் உறுப்பினர்களின் உறுதுணையாலும் மற்றும் ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும்
ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயம் இன்று வரை பக்தர்களின் பிரார்த்தனைக்கு அன்புடன் செவி சாய்த்து பக்தர்களுக்கு கேட்கும் வரத்தினை அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ உமாமகேஸ்வரர்.
இவ்வாலயத்தில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சிவதுர்கை, ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆகியோர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயத்தில் தவறாது நடக்கும் பிரதோஷ கால பூஜையில் கலந்து கொள்ளும் மக்களின் எல்லாவிதமான கோரிக்கைகளும் நிறைவேறுகிறது. எல்லாவிதமான அபிஷேகங்களும்
ஸ்ரீ நந்தீஸ்வரருக்கு செய்த பின் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கும் போது உள்ளம் உருகி பிரார்த்திக்கும் மக்களின் எல்லா பிரச்சனைகளும் குறைந்து மனம் லேசாகி, மனம் அமைதி அடைவதை அனுபவத்தில் பார்க்கலாம்.
ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவர் ஹோமம் நடைபெறுகிறது. ஏறக்குறைய 18 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பூஜையில் பங்கு பெற்று பலன் பெற்றவர்களின் அனுபவங்கள் மூலம் கால பைரவரின் சக்தியை நமக்கு உணரவைக்கிறது. வெள்ளி தோறும் சிவ துர்க்கைக்கு பக்தர்களின் வேண்டுதல் பொருட்டு விஷேச பூஜை நடைபெறுகிறது.
எத்தகைய விவாகத் தடைகள் இருந்தாலும் அந்த தடைகள் ஸ்ரீ உமாமகேஸ்வரரின் அருளால் நாம் சங்கல்பித்த சில வாரங்களிலேயே தடைகள் அகன்று திருமணம் நடந்தேறுவது அனுபவம். அது எத்தகைய கிரக தோஷமாகயிருந்தாலும், ஏவல், பில்லி சூன்ய தோஷங்களாய் இருந்தாலும், தான் செய்த பாபங்களோ, முன்னோர்கள் இட்ட சாபங்களோ இவை எவற்றால் விவாகத் தடை ஏற்பட்டிருந்தாலும், அவைகள் விலகி, ஸ்ரீ உமாமகேஸ்வரர் அருளால் விவாகம் நல்லபடியாய் நடந்துவிடுவது அனுபவம்.
ஸ்ரீ வெள்ளலூர் சுவாமிகள் மாலை நேரங்களில் இங்கு வந்து தியானத்தில் அமர்ந்து இருக்கும் போது அவரை சுற்றி சர்பங்கள் இருக்கும் என்றும், அவர் அதை மாலையாக அணிந்து கொள்வார் என்று ஊர் மக்கள், மற்றும் அனுபவம் நிறைந்த பெரியவர்கள் இன்றும் சொல்லி இத்தலத்தின் மகிமைதனை மனமார நினைத்து இன்றும் பக்தியுடன் இக்கோயிலுக்கு வருகின்றார்கள்.
பேரூரில் இருந்து சிற்றுந்து சேவை இருப்பதால் இந்த ஆலயத்திற்கு வர மிகவும் வசதியாக உள்ளது.
திருமண தடையோ, தொழிற்த் தடையோ எதுவாகயிருந்தாலும் ஸ்ரீ உமாமகேஸ்வரரை பிராத்தனை செய்து பலனை உணருங்கள்.